என் மலர்
தமிழ்நாடு
மாடு விடும் விழா திடீர் நிறுத்தம்- கலெக்டர், எஸ்.பி. நேரில் விசாரணை
- யாருக்கும் எந்தவித காயம் இல்லாமல் விழாவை நடத்த வேண்டும்.
- மாடு விடும் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் கிராமத்தில் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா (மாடு விடும் விழா) இன்று நடந்தது.
இதனையொட்டி விழா நடக்கும் வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டது.
விழா நடக்கும் வீதியில் ஒலிபெருக்கி, வாழை மரங்கள், மாவிலை தோரணம் மற்றும் வண்ண காகிதங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. காலை 7 மணி அளவில் காளைகளுக்கு முதலில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வீதியில் அவிழ்த்து விடுவதற்காக காளைகள் வாடிவாசல் அருகே கொண்டு வரப்பட்டது.
அந்த நேரத்தில் காளைகள் மீது கை போடுவதற்காக ஓடு பாதையில் ஏராளமானோர் வரிசையாக திரண்டு நின்றனர். மாடுகள் ஓடினாலும் அவர்களை முட்டி தூக்கி வீசிவிட்டு தான் செல்லும் நிலையில் அவர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். இதனை கண்ட போலீசார் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டால் ஓடுபாதையில் இருப்பவர்களுக்கு படுகாயம் ஏற்படும். அவர்களை வெளியேற சொல்லுங்கள் என விழா குழுவினரிடம் தெரிவித்தனர்.
அப்போதும் ஓடு பாதையில் இருந்தவர்கள் வெளியேறவில்லை .இதனால் மாடு விடும் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விழா குழுவினர் மற்றும் போலீசார் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். யாருக்கும் எந்தவித காயம் இல்லாமல் விழாவை நடத்த வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விழா குழுவினர் தான் பொறுப்பு என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஓடு பாதையில் நின்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 40 நிமிடம் தாமதமாக மாடு விடும் விழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.