என் மலர்
தமிழ்நாடு
மாடுகளால் ஏற்படும் பிரச்சனை குறித்த விவாதம்: எனது வீட்டுக்கும் தினமும் மாடுகள் வருகின்றன- துணை மேயர்
- சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.
- குதிரை தொழுவங்கள் அமைப்பது உள்பட மொத்தம் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மாடுகளால் ஏற்படும் பிரச்சனை குறித்த விவாதம் நடந்தபோது, எனது வீட்டுக்கும் தினமும் மாடுகள் வருகின்றன என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயா் மகேஷ்குமார் மற்றும் கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடையில் வந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய பெரும்பாலான கவுன்சிலர்கள், தெருநாய் மற்றும் மாடுகளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து பேசினார்கள். சிலர் மாடுகள் சாலையில் சுற்றித்திரிவதால் மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலையில் திரியும் மாடுகளுக்கு அபராத தொகையை குறைக்க வேண்டும் என மேயரிடம் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் மண்டல குழு உறுப்பினர் ஸ்ரீராமலு (தி.மு.க.) பேசியபோது, "சாலையில் மாடுகள் அதிகமாக திரிகிறது. அதை கட்டுப்படுத்த வேண்டும். மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும்"என்றார்.
அப்போது துணை மேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு, "'வீடுகளில் தொழுவங்கள் வைத்து மாடுகள் வளர்த்தால் அபராதம் விதிப்பதில்லை. சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. எனது வீட்டுக்கும் தினமும் 5 மாடுகள் வருகின்றன" என்றார்.
மேயர் பிரியா பதில் அளித்து பேசும்போது, "தற்போது மாநகராட்சி நிதி மூலம் 15 மண்டலங்களிலும் மாட்டு தொழுவங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின்பு அபராதம் குறைப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்"என்றார்.
சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக 5 இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. ஏற்கனவே மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர் மற்றும் அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கருத்தடை மையத்திலும் ஆண்டுக்கு 6 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும். ஒவ்வொரு இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் கால்நடை டாக்டர், அறுவை சிகிச்சை கூடம், ஆய்வுக்கூடம், நாய்கள் அடைக்கும் அறைகள், உணவு மற்றும் மருந்து வழங்கும் இடம் ஆகியவை அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் நீர்வரத்துக்கு இடையூறாக உள்ள 19 பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு ரூ.45 கோடியில் அதே இடத்தில் 19 புதிய பாலங்கள் கட்டுவது, கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் குதிரை தொழுவங்கள் அமைப்பது உள்பட மொத்தம் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.