என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகளை உருவாக்க முடிவு- வனத்துறை தகவல்

- மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
- தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.
சென்னை:
2022-23-ம் ஆண்டு சட்டமன்றத்தில் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம பசுமைக் காடுகள்) உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களை சார்ந்து இருப்பதை குறைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.இந்த பூஞ்சோலைகள் உள்ளூர் மக்களுக்கு தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் இதன் மூலம் காடுகளின் மீதான உயிரின தாக்கமும் குறைகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.25 கோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிர்வாக ஒப்புதலையும் தமிழக அரசு வழங்கியது.
ஒவ்வொரு மரகத பூஞ்சோலையும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 639 சதுர அடி பரப்பில் உருவாக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் நுழைவுவாயில், நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேஜைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த பூஞ்சோலைக்குள் தடிமரம், எரிபொருள், தீவனம், காய்-கனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை நடவு செய்யப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக மாநில அரசினால் 83 மரகத பூஞ்சோலைகள் அமைக்க 2 கட்டமாக ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இதுவரை 29 மாவட்டங்களில் 75 பூஞ்சோலைகள் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று, கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. மீதமுள்ள 8 பூஞ்சோலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
தற்போது மேலும் 5 மாவட்டங்களில் ரூ.4 கோடியே 25 லட்சம் செலவில் திண்டுக்கலில் 5 பூஞ்சோலைகள், பெரம்பலூரில் 4 பூஞ்சோலைகள், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 3 பூஞ்சோலைகள், திருவண்ணாமலையில் 2 பூஞ்சோலைகள் என மொத்தம் 17 பூஞ்சோலைகள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 100 மரகதப் பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுவிடும்.