என் மலர்
தமிழ்நாடு
48வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சி இன்று முதல் தொடங்குகிறது.
- மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்தார்.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
நந்தனத்தில் அமைந்துள்ள YMCA உடற்கல்வியில் கல்லூரியில் நாளை தொடங்கும் புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருது ஆகியவை வழங்கப்பட உள்ளது.