என் மலர்
தமிழ்நாடு
திருச்செந்தூர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
- திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
- பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. அவர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர்.
இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர், அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி நடராஜர், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் தனித்தனி தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிராகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கழி படைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூர் நகர எல்லையில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெருக்கடியால் திருச்செந்தூர் சன்னதி தெரு, பட்டர் குளம் தெரு, அக்ரகாரம், ரதவீதிதளில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கோ அல்லது அத்தியாவசிய தேவைக்கோ வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ராணிமகராஜபுரத்தில் உள்ளது. திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். எனவே வரும் காலங்களில் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.