என் மலர்
தமிழ்நாடு
கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்
- சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வில்லிவாக்கம், அண்ணாநகர், துறைமுகம், ஆயிரம்விளக்கு பகுதியிலும் மறியல் நடந்தது.
சென்னை:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டதை கண்டித்து சென்னையில் சேத்துப்பட்டு சிக்னல் அருகில் மாவட்ட தலைவர் சுரேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.மனோன்மணி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை.
தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறிது நேரம் நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 38 மாற்றுத் திறனாளிகளை குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.
இதேபோல வில்லிவாக்கம், அண்ணாநகர், துறைமுகம், ஆயிரம்விளக்கு பகுதியிலும் மறியல் நடந்தது.
திருவொற்றியூர் டி.எச்.சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில பொதுச் செயலாளர் ஜான்சி ராணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே. நகர், ராயபுரம், திருவொற்றியூர், மணலி, எண்ணுார் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.