search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முறையாக சமைக்காத இறைச்சி உணவை சாப்பிட்டால் ஜி.பி.எஸ். பாதிப்பு ஏற்படும்- டாக்டர்கள் எச்சரிக்கை
    X

    முறையாக சமைக்காத இறைச்சி உணவை சாப்பிட்டால் ஜி.பி.எஸ். பாதிப்பு ஏற்படும்- டாக்டர்கள் எச்சரிக்கை

    • பெரும்பாலும் வைரஸ் தொற்றால்தான் ஜி.பி.எஸ். நோய் ஏற்படுகிறது.
    • சமீபத்தில் புனேவில் இந்நோயினால் 150 பேர் பாதிக்கப்பட்டனர்.

    ஜி.பி.எஸ். என்ற நோயினால் தமிழகத்தில் திருவள்ளூரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சிறுவன் முதலில் நடப்பதற்கு சிரமப்பட்டதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வேறு ஏதும் அறிகுறி தெரியாததால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அது ஜி.பி.எஸ். நோய் என்று கண்டுபிடித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கடந்த 31-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தான்.

    அவனுக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவனது வீட்டுக்கு அருகே சுகாதாரத்துறை முகாமிட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டது. அதில், அந்தப் பகுதியில் அச்சுறுத்தும் வகையிலான நோய் பரவல் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்தது. இருந்தபோதிலும், சுகாதாரமற்ற நீா், உணவில் ஜி.பி.எஸ். நோயை பரப்பும் பாக்டீரியாக்கள் காணப்படுவதால் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனா்.

    இதுகுறித்து அச்சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் கூறியதாவது:-

    இது நரம்பு மண்டலத்தை பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் நடக்க சிரமப்படுவார்கள் உடலில் சோர்வும் இருக்கும். இந்த அறிகுறி இருப்பவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவர்களை அணுகுவது நல்லது.

    இது அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய நோயாக இருந்தாலும் அதிகமாக இது ஆண்களையே பாதிக்கிறது. ஆனாலும் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் இதை குணப்படுத்தி விடலாம்.

    இந்த நோய் அரிதாகவே சிலரை தாக்குகிறது. பெரும்பாலும் வைரஸ் தொற்றால்தான் இந்த நோய் ஏற்படுகிறது. சமீபத்தில் புனேவில் இந்நோயினால் 150 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடித்த குடிநீர் மற்றும் உணவு முலம் இந்நோய் தொற்று பரவுவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் சி.ஜெஜூனி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்நோய்க்கு முக்கிய காரணியாக உள்ளது.

    இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

    இது தொடா்பாக பொது நல மருத்துவ நிபுணா் பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    ஜி.பி.எஸ். பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம். நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும்.

    ஜி.பி.எஸ். நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், கேம்பைலோபாக்டா் ஜேஜுனி என்ற பாக்டீரியாவால்தான் 35 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே, பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அதேபோன்று இறைச்சியை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் வேக வைப்பது அவசியம்.

    அடிக்கடி கைகளை கழுவுவதையும், அசைவ உணவுகள் சூடாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    புனேவிலும், கொல்கத்தாவிலும் ஏற்பட்ட பாதிப்புக்கு தண்ணீரில் கலந்திருந்த 'கேம்பைலோபாக்டா் ஜேஜுனி' பாக்டீரியாதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

    இந்த பாக்டீரியவானது 10,000 பேரில் ஒருவருக்கு ஜி.பி.எஸ். நோயை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு பெரும்பாலானோருக்கு தானாகவே குணமாகிவிடும்.

    குழந்தைகள், எதிர்ப்பாற்றல் குறைந்தவா்கள், முதியவா்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம். அவா்களுக்கு எதிா்ப்பாற்றல் எதிா்வினை ஏற்பட்டு நரம்புகளின் வெளிப்புறத்தை கிருமிகள் தாக்கக்கூடும். இதற்கு 'மாலிக்யூலாா் மிமிக்ரி' எனப் பெயா்.

    இவ்வாறு எதிா்வினை பாதிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது வாத நோய் ஏற்படுகிறது. மூச்சு விடுவதற்கு தேவையான தசைகளும் தளா்ச்சி அடைவதால் சுவாச செயலிழப்பு ஏற்படுகிறது.அத்தகைய நிலையை எட்டுவோருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை அவசியம். மற்றவா்கள் அச்சப்படத்தேவையில்லை. விழிப்புணா்வு இருந்தால் போதுமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×