என் மலர்
தமிழ்நாடு
மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
- பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் இருக்கும் மலை கிராமங்களில் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தம்முரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார், இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சித்தனின் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய யானை அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
யானை வனப்பகுதியில் இருந்து மலை கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் பொருட்டு வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்ததோடு சேதமான பயிருக்கும் உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.