search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர் விடுமுறை- வங்கிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்
    X

    ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர் விடுமுறை- வங்கிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்

    • வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
    • வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும்.

    சென்னை:

    வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு வரையிலும் என 48 மணி நேரம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

    இந்த வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 8 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க முன்வராததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சிரமம் ஏதேனும் ஏற்பட்டால், அதனை பொறுத்துக்கொண்டு எங்களுடைய வேலைநிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று கூறப்பட்டு உள்ளது.

    வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை ஆகும். அந்தவகையில், 4-வது சனிக்கிழமை வருகிற 22-ந்தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 23-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையாகும்.

    இதற்கு அடுத்த 24, 25-ந்தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிச்சேவைகள் முடங்கும் அபாயம் இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல வங்கி சேவைகளை பெறுவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு வங்கி ஊழியர் சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

    Next Story
    ×