search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நம்மவர் படிப்பகங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்- ம.நீ.ம அறிவிப்பு
    X

    நம்மவர் படிப்பகங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்- ம.நீ.ம அறிவிப்பு

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம்.
    • தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.

    இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

    தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

    கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.

    அமெரிக்காவில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

    அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர்.

    ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும்.

    சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன் மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×