என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2-வது நாளாக பிரசாரம்- வீடு வீடாக சென்று தி.மு.க சாதனை கூறி வாக்கு சேகரிப்பு
- நேற்று மாலை முதல் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
- இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொட ங்கி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க-பா.ஜ.க தேர்தலை புறக்கணித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு தேர்தல் களம் கடந்த முறை போன்று பரபரப்பு இல்லாமல் காட்சியளிக்கிறது. அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை முதல் தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் நகர் பகுதி, கள்ளுக்கடை மேடு, ஓடைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தனர். அதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலை 7 மணிக்கு தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
இன்று எஸ்.கே.சி ரோடு, மாமலை வீதி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொட ங்கி உள்ளனர்.