என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு இடைத்தேர்தல்- ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரர் அளித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்கும் வகையில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் ஒவ்வொரு வாக்குச்சாவிலும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவிகள், ஒரு வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உண்மை தகவல்களை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்தோரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து மனுதாரர் அளித்த புகார் மனு மீது தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தினர்.