search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க.வுக்கு விட்டு கொடுக்க தமிழக காங்கிரஸ் முடிவு
    X

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க.வுக்கு விட்டு கொடுக்க தமிழக காங்கிரஸ் முடிவு

    • வருகிற பிப்ரவரி மாதம் டெல்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லை.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வே.ரா. போட்டியிட்டு வென்றார்.

    ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் திடீரென்று அவர் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. அப்போது மீண்டும் காங்கிரசுக்கே அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் இறக்கப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    மகனை போலவே தந்தை இளங்கோவனும் கடந்த 14-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இதனால் அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த தொகுதிக்கான தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.

    வருகிற பிப்ரவரி மாதம் டெல்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

    பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைவதற்குள் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.


    மீண்டும் இந்த தொகுதியை காங்கிரசுக்கு கொடுப்பதை விட தி.மு.க.வே போட்டியிட விரும்புகிறது.

    கடந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் பேரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அப்போது தலைவர் என்ற ரீதியில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்கள்.

    ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லை. ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் இருந்து அவரது மகன் சஞ்சயை போட்டியிட வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

    அத்துடன் தனது முடிவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தெரிவித்து விட்டார்.

    இந்த சூழ்நிலையில் காங்கிரசில் இருந்து வேறு நபர்களை தேர்வு செய்வதிலும் பிரச்சனை உள்ளது. இடைத்தேர்தலை சந்திக்க செலவு அதிகமாகும். அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி மேலிடத்துக்கும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தனது சுற்றுப் பயணத்தின் போது ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து விவாதித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது பற்றி முறையாக காங்கிரசாருடன் கலந்து பேசி முடி வெடுத்து அறிவிப்போம் என்றார்.

    விட்டுக் கொடுக்கும் மன நிலைக்கு காங்கிரஸ் வந்திருப்பதால் ஈரோடு தொகுதியில் தி.மு.க.வே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொகுதியில் பலத்தை நிரூபிப்பதன் மூலம் கொங்கு மண்டலத்தில் 2026 தேர்தலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று தி.மு.க. கருதுகிறது.

    Next Story
    ×