என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜ.க. போட்டியா? - நிர்வாகிகளுடன் ஆலோசனை
- பா.ஜ.க. இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
- த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் அந்த தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
கடந்த 10-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 17-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
தி.மு.க. கூட்டணியில் தனது கைவசம் இருந்த இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பாததால் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தே.மு.தி.க.வில் இருந்தபோது இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்ததை போல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.
கடந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி இந்த தேர்தலும் நேர்மையாக நடக்காது என்பதால் புறக்கணிக்கும் முடிவை எடுத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது.
எனவே தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பா.ஜ.க.வும் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்டது. அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட யுவராஜ் காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈ.வெ.ரா. பெற்ற வாக்குகள் 67,300, த.மா.கா. வேட்பாளர் பெற்ற வாக்குகள் 58,396.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.வுக்கு கணிசமான செல்வாக்கு உண்டு. எனவே அ.தி.மு.க. போட்டியிடாவிட்டாலும் முன்புபோல் அ.தி.மு.க. ஆதரவுடன் த.மா.கா.வை போட்டியிட செய்து அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கலாம் என்ற யோசனையை பா.ஜ.க. முன் வைத்தது. இது தொடர்பாக ரகசிய பேச்சுக்களும் நடந்தன. ஆனால் எந்த கட்சியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதற்கிடையில் சென்னையில் முகாமிட்டுள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன், பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றார்கள்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. இன்று புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றியும் ஆலோசித்தார்கள்.
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் கட்சி அலுவலகத்தில் இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில துணைத் தலைவர் விடியல் சேகர், யுவராஜா, ஈரோடு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், புறநகர் மாவட்ட தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ஈசுவரமூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
த.மா.கா., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் இன்று தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. களம் இறங்குமா? அல்லது த.மா.கா. போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி கட்சிகளுடன் பேசி தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.