search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில், தேவாலயம், மசூதியாக இருந்தாலும் விதிமீறி கட்டினால் இரக்கம் காட்ட முடியாது- ஐகோர்ட் உத்தரவு
    X

    கோவில், தேவாலயம், மசூதியாக இருந்தாலும் விதிமீறி கட்டினால் இரக்கம் காட்ட முடியாது- ஐகோர்ட் உத்தரவு

    • தியாகராய நகரில் விதிமீறல் கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
    • 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பள்ளி மீது சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

    சென்னை:

    சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, தரைதளம் மற்றும் முதல் தளம் மட்டும் கட்டுவதற்கு கட்டிட அனுமதி பெற்று உள்ளது. ஆனால், அனுமதி இல்லாமல் தரைதளம் மற்றும் மூன்று தளங்களை கட்டியுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து பள்ளி கட்டிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தனியார் பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ''மனுதாரர் பள்ளியில் சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனால் கூடுதல் தளம் கட்டிய விவகாரத்தில் அரசு கருணை காட்டவேண்டும். சென்னை தியாகராய நகரில் ஏராளமான விதிமீறல் கட்டிடங்கள் உள்ளன. ஆனால், பள்ளி கட்டிடம் மீது மட்டும் கடும் நடவடிக்கை எடுப்பது சரியாகாது. அதனால் இரக்கம் காட்ட வேண்டும்'' என்று வாதிட்டார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ''தியாகராய நகரில் விதிமீறல் கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    அந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிப்பாட்டுத்தலத்தில் அனுமதியின்றி கட்டிடம் கட்டினாலும், அது விதிமீறல்தான். இதற்கெல்லாம் இரக்கம் காட்டமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    அதேநேரம், 1,500 மாணவர்கள் படிப்பதால், கல்வியாண்டு முடிவடையும், அதாவது 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பள்ளி மீது சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது.

    இந்த அளவுக்கு மட்டும்தான் இந்த ஐகோர்ட்டினால் இரக்கம் காட்ட முடியும்'' என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×