search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுக்குழு கூட்டத்தில் மோதல்- இன்று ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி
    X

    பொதுக்குழு கூட்டத்தில் மோதல்- இன்று ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி

    • கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது.
    • இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.

    விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடியும் தருவாயில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.

    இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அவர் கூறும்போது 'கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது. அவர் கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டார். அதற்கு பதில் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கலாம்' என்றார்.

    உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்'' என்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.

    தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறி அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ராமதாசும் மேடையில் இருந்து இறங்கிச் சென்றார்.

    கூட்டத்தில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் சிலர், டாக்டர் அன்புமணிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி வெளியேறினார்கள். டாக்டர் ராமதாஸ் வெளியில் வந்து காரில் ஏறியபோது, அவர் கார் முன்பு சிலர் மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், பா.ம.க.வினரும் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினார்கள்.

    பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை இன்று காலை 11 மணிக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×