search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசு தினவிழா- தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி

    • முப்படை தளபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
    • கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஏ.அமீர் ஹம்சாவுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    இந்தியாவின் 76-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். இதில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொண்டனர். கண்கவர் அணிவகுப்பையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

    இதேபோல் மாநில தலைநகரங்களிலும் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் கவர்னர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார்.

    பின்னர் முப்படை தளபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

    அதன்பிறகு கவர்னருக்கு முப்படைகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வான் படை வீரர்கள், கடலோர காவல்படை வீரர்கள், ராணுவ படை ஊர்தி, ராணுவ கூட்டுக்குழல் முரசு இசைப்பிரிவு, கடற்படை ஊர்தி, வான்படை ஊர்தி, கடலோர காவல்படை ஊர்தி, முன்னாள் ராணுவத்தினர், சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு வீரர்கள், ஆர்.பி.எப். படைப்பிரிவினர், காவல்துறை முழு பொறுப்பு (ஜிப்சி), தமிழ்நாடு சிறப்பு காவல் பெண்கள் படைப் பிரிவினர், தமிழ்நாடு காவல் ஆயுதப்படை கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, ஆந்திரப் பிரதேச சிறப்பு காவல் ஆண்கள் படைப்பிரிவு, சிறப்பு கமாண்டோ படைப் பிரிவு, சிறைப்படை கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை, நீலகிரி படைப்பிரிவு, குதிரைப்படை பிரிவு, தமிழ்நாடு வனத்துறை படை பிரிவு, சிறைப்படை பிரிவு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் முரசிசை பிரிவு, ஊர்க் காவல் படை ஆண்கள் பிரிவு, ஊர்க்காவல் பெண்கள் படைப்பிரிவு, தேசிய மாணவர் படை கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, தேசிய மாணவர் படை ஆண்கள் பிரிவு, நாட்டு நலப்பணி திட்ட பெண்கள் பிரிவு, சாலை பாதுகாப்பு பெண்கள் பிரிவு, சாலை பாதுகாப்பு கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, சாலை பாதுகாப்பு ஆண்கள் பிரிவு, பள்ளி மாணவர்கள் கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

    அதன்பிறகு சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கத்தை சென்னையை சேர்ந்த முன்னணி தீயணைப்பு வீரர் க.வெற்றிவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஏ.அமீர் ஹம்சாவுக்கு வழங்கப்பட்டது. அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக் கான வேளாண்மை துறை யின் சிறப்பு விருதான சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனி மாவட்டத்தை சேர்ந்த ரா.முருகவேலுக்கு வழங்கப்பட்டது.

    பின்னர் காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பெ.சின்னகாமணன், விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் கி.மகாமார்க்ஸ், துறையூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் க.கார்த்திக், சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்கள் கா.சிவா, ப.பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.

    பின்னர் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் முதல் பரிசு மதுரை மாநகரத்துக்கும், 2-ம் பரிசு திருப்பூர் மாநகரத்துக்கும், 3-ம் பரிசு திருவள்ளூர் மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டது. பின்னர் பதக்கம், விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    அதன் பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றது. இதை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவியின் மனைவி லட்சுமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்

    பின்னர் அணிவகுப்பு தளவாய் விங் கமாண்டர் சர்தாக் புதியாவை கவர்னருக்கு, தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்பிறகு நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சிகள் முடிவடைந்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×