என் மலர்
தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் கொட்டி தீர்த்த கனமழை- குன்னூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

- முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி:
கோவை நகரில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வந்தது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்ச்சியான பானங்களை வாங்கி குடித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் சற்று மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறியது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து சாரல் மழை, பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இடியுடன் பெய்த கனமழைக்கு அவினாசி சாலை, ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் அதில் மெல்ல ஊர்ந்து சென்றன.
திடீர் மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று திரும்பியோர் பலர் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. சிலர் மழைக்கு ஆங்காங்கே பாதுகாப்பாக ஒதுங்கி நின்றனர்.
இதேபோல் உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த திடீர் மழையால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை மாறியது. இரவிலும், அதிகாலையிலும் குளிர் தெரிந்தது. வெப்பணம் தணிந்து குளிர் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பகலில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர், சேலாஸ், கொலகம்பை, வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, காட்டேரி, கரும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக அங்குள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைக்கு, ஓட்டு பட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் சமுதாயக்கூடம் அருகே தடுப்பு சுவர் இல்லாததால் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து அங்குள்ள புவனேஸ்வரி மற்றும் சுலோச்சனா ஆகியோரின் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக ஊட்டியில் கடந்த சில தினங்களாக நிலவிய வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.