என் மலர்
தமிழ்நாடு

மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காட்சி.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது

- மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்ததது. அதன்படி 2 நாட்களாக பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. பிற்பகலில் 3 மணி அளவில் திடீரென மழை பொழிய தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் வி.கே.புரம் பகுதியில் பழமையான மரம் முறிந்து விழுந்தது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 36.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேரன்மகாதேவியில் 29 மில்லிமீட்டரும், நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்றொரு புறம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்திருந்தது. சில இடங்களில் அவை மழையால் வயல்களில் சாய்ந்தன.
அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 80.60 அடியாக இருந்த நிலையில், நேற்று முழுவதும் பெய்த மழையால் 2 அடி உயர்ந்து 82.50 அடியை எட்டியது. அங்கு இன்று காலை வரை 48 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 85.35 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று காலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 8.1 சென்டிமீட்டரும், நாலு முக்கில் 7.2 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.6 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் இன்று காலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டது.
மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் செம்மண் கலந்த கலரில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் முழுவதும் இரவில் பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெற்கதிர்கள் வயல்களுக்குள்ளேயே சாய்ந்து கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மழை பெய்தால் நெற்கதிர்கள் முளைக்கும் தருவாய்க்கு செல்லப்படும் எனவே தற்பொழுது பெய்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்களுக்கு நன்மை ஏற்பட்டாலும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தென்காசி நகர் பகுதியிலும், செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாலையில் தொடங்கி இரவு வரையிலும் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 54 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தென்காசியில் 24 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், மணியாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எட்டயபுரம், வேடநத்தம், சூரன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக மணியாச்சியில் 18 மில்லிமீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கயத்தாறில் 6 மில்லிமீட்டரும், கடம்பூரில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.