என் மலர்
தமிழ்நாடு
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
- பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30-க்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கால சந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணியில் இருந்து 9 மணிக்குள் உச்சி கால தீபாராதனை மற்றும் ஸ்ரீபலி நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக் கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு இராக்கால தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்தம், 8 மணியில் இருந்து 8.30க்குள் பள்ளியறை தீபாராதனை நடை பெற்று நடை திருக்காப்பிடப்படுகிறது.