என் மலர்
தமிழ்நாடு
தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டி சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜூகள் நிரம்பி வழிகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா தலமான நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது புத்தாண்டு பண்டிகை நெருங்கி வருவதால் புத்தாண்டை கொண்டாடவும், இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் ஏராளமானோர் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது ஊட்டியில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவுகிறது. இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜூகள் நிரம்பி வழிகிறது.
இரவில் கடும் குளிர் வாட்டி வதைப்பதல், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சுவர்ட்டர் மற்றும் சால்வைகளை அதிகளவில் வாங்குகிறார்கள். இதனால் வெம்மை ஆடை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் உள்ள ஊட்டி-கூடலூர் சாலை, குன்னூர், கோத்தகிரி சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளான தலைகுந்தா, எச்.பி.எப், பிங்கர் போஸ்ட், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகளால் திட்டமிட்டபடி, சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்க்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் உறைபனி படர்ந்து, அந்த பகுதியே வெண்மை ஆடை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. அங்கு சுற்றுலா வரும் பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.