என் மலர்
தமிழ்நாடு

மும்மொழிக் கொள்கை திணிப்பு: பா.ஜ.க.-வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்

- தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- தாயகம் வேறு; தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.
பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க.வின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
தாயகம் வேறு; தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது;
மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிட வெறுப்பு, தமிழகம் புறக்கணிப்பு ஆகிய காரணங்களால் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.