search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை சேர்க்க திட்டம்?
    X

    சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை சேர்க்க திட்டம்?

    • எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார்.
    • ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் உள்கட்சி மோதலால் அ.தி.மு.க. தவித்து வருகிறது.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு கட்சியின் தலைமை பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வில் ஆள் ஆளுக்கு கருத்துக்களை கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்ததும் அடுத்தடுத்து அவர் தெரிவித்த கருத்துக்களும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

    செங்கோட்டையனின் கருத்துக்கு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் புதிய பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனை மையமாக வைத்து செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் சேர தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோடு அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்கு வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்னும் 6 மாதம் பொறுமையோடு காத்திருந்தால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இப்படி ஓ.பி.எஸ்.சை சேர்க்கும் விவகாரம் அ.தி.மு.க.வில் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் இதுபற்றி அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர முன் வந்தால் அவர்களை நிச்சயம் வரவேற்க வேண்டும் என்பதில் இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியுடனேயே உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் வந்து சேர்ந்தால் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் விஷயத்தில் மட்டும் எடப்பாடி பழனிசாமி இன்னும் மனம் இறங்காமலேயே இருந்து வருகிறார்.

    ஏனென்றால் ஓ.பி.எஸ்.சின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி இருந்து உள்ளன. அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது முதல் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டது வரை எதை மறந்து விட்டு ஓ.பி.எஸ்.சை கட்சிக்குள் சேர்த்துக் கொள்வது? என்பதே எடப்பாடி பழனிசாமியின் கேள்வியாக இருந்து வருகிறது.

    இருப்பினும் அவரது மனதை மாற்றி ஓ.பி.எஸ்.சை மீண்டும் கட்சியில் சேர்த்து உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்கிற கருத்து அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய தலைவர்களின் விருப்பமாகவே இருந்து வருகிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள முன்னணி நிர்வாகிகள் இதுபற்றி அவரிடம் தொடர்ந்து எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர், "ஓ.பி.எஸ்.சை சேர்ப்பது பற்றியெல்லாம் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறி அந்த பேச்சை அப்படியே முடித்துக் கொண்டுள்ளார்.

    இருப்பினும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நம்மால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்பதையும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அ.தி.மு.க. தலைமையிடம் எடுத்து கூறியுள்ளனர். எனவே தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் போது ஓ.பி.எஸ். உள்ளிட்ட பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக பெரிதாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×