என் மலர்
தமிழ்நாடு
மாணவி பாலியல் பலாத்காரம்- வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவு
- அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
- நீதிபதிகள் இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து பட்டியலிட அறிவுறுத்தினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக பெண் வக்கீலான வரலட்சுமியின் கடிதம் ஒன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளான எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு இன்று தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
மனுவில், " சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை உள்நோக்கத்துடன் அவர்கள் கசியவிட்டுள்ளனர். எனவே வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கோர்ட்டில் வாதாடிய வக்கீல் ஜெய பிரகாஷ் நாராயணன் சென்னையின் இதய பகுதி போன்ற அண்ணா பல்கலைகழகத்தில் நடந்துள்ள பாலியல் சம்பவம் துரதிருஷ்டவசமானது. எனவே ஐகோர்ட்டு இந்த கடிதத்தை ஏற்று தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று பிற்பகலில் வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து பட்டியலிட அறிவுறுத்தினர்.
அப்போது தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், போலீசார் டி.ஜி.பி. சென்னை போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குறித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி உத்தரவுக்கு பிறகு வழக்கு விசாரணைக்கு பட்டியிலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இன்று மாலை 4.45 மணிக்கு விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, இன்று மாலை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிடவில்லை; இணையத்தில் வெளியான எப்ஐஆர் அறிக்கை தமிழக அரசு முடக்கப்பட்டது.
வழக்கு தொடர்பான விரிவான அறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.