என் மலர்
தமிழ்நாடு
திருச்செந்தூர் கடற்கரையில் அரிப்பை தடுக்க ஐ.ஐ.டி. நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு- கனிமொழி
- திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
- கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டு கடற்கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் வரை 7 அடியில் இருந்து 10 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் அரிப்பை தடுத்து கோவிலை பாதுகாக்கும் பொருட்டு இன்று காலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஆகியோர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலையொட்டி உள்ள கடற்கரை தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத நிலை உள்ளது. கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து கடல் அரிப்பு பாதிப்பு ஏற்படுவது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடற்கரை குறைந்து கொண்டே வருகிறது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம்.
இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக கடற்கரை அரிப்பை தடுக்க ஐ.ஐ.டி. நிபுணர்கள் மற்றும் சிறந்த வல்லுனர்கள் மூலமாக ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையாளர் சுகுமாரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, தலைமை பொறியாளர் பெரியசாமி, திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையாளர் அன்புமணி, கோவில் பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தாசில்தார் பாலசுந்தரம், ஐ.ஐ.டி. பேராசிரியர் சன்னாசிராஜ், மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் புஷ்ரா சற்குணம், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.