search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தி தெரியாததால் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை- கனிமொழி
    X

    இந்தி தெரியாததால் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை- கனிமொழி

    • இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை.
    • பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன் முன்னிலை வகித்தார்.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மருத்துவர் அணி தலைவர் கனிமொழி சோமு எம்.பி., மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    பெண்களை படிக்கக்கூடாது என்றும், இந்த உலகத்தில் உன்னால் போட்டிபோட முடியாது என்று சொல்வார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தற்போது பெண்கள் முன்னேற்றம் அடைந்ததற்கு நமது தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் காரணம். பெண்கல்வி இருந்தால் சமூகம் மாற்றம் அடையும்.

    நம்முடைய மொழியை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை நம் மீது திணித்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கள் வீட்டு பிள்ளைகள் யார் இந்தி படிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்தது கிடையாது. நான் டெல்லியில் இருக்கும்போது இந்தி தெரியாததால் எனக்கு இதுவரை எந்த சிரமமும் ஏற்படவில்லை.

    இந்தி படித்தால் என்ன லாபம்? என்று தெரியவில்லை. பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து லட்சக்கணக்கான நபர்கள் வேலை தேடி தமிழகம் வருகிறார்கள்.

    அவர்கள் தமிழ் தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். தமிழ் படித்தவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். மும்மொழி கொள்கை படிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பல்வேறு நாடுகளில் ஒன்று அல்லது 2 மொழிகள் மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.

    எந்த தடையும் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்று பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×