என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/08/9077164-fireaccident.webp)
கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
- விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி என்பவர் காயமடைந்தார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கான தீப்பெட்டி ஆலை உள்ளது. இதனை கோவில்பட்டி லாயல் மில் காலனியை சேர்ந்த செண்பக விநாயக மூர்த்தி, சிராக் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் டிராக்டர் டேங்கர்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி (வயது 55) என்பவர் காயமடைந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் ஆலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், மூலப்பொருட்கள், எந்திரங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமானது. விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.