என் மலர்
தமிழ்நாடு

மும்மொழிக்கொள்கையில் முதலமைச்சர் தவறான வழியில் மக்களை திசை திருப்புகிறார்- எல்.முருகன்

- ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
- மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.
மதுரை:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொலைநோக்கு பார்வையுடன் 2047-ம் ஆண்டுக்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கான இந்தியா வல்லரசு நாடாக அடித்தளமாக உள்ள பட்ஜெட் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி கொண்டுள்ளார். தவறான தகவல்களை பேசிக் கொண்டு வருகிறார்.
மத்திய கல்வித்துறை மந்திரி மிகத் தெளிவாக சொல்லி உள்ளார். பிரதமரின் திட்டத்திற்கு முதலில் கையெழுத்து போட்டார்கள். திரும்ப பின்வாங்கி விட்டார்கள். நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதாக தர்மேந்திர பிரதான் என்னிடம் சொன்னார். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை?
ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கல்வியாளர்கள், வல்லுநர்கள் ஆகியோர்களின் ஆலோசனைபடி உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை.
இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியை முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்.
மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை. வெற்றிவேல் யாத்திரை நான் நடத்தினேன். நான் திருப்பரங்குன்றம் செல்வதில் எந்த அரசியலும் இல்லை. சர்ச்சையும் இல்லை. நான் என் வழிபாட்டு உரிமை அடிப்படையில் செல்கிறேன். கூட்டணி தொடர் பான அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.