என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள்- எல்.முருகன்

- பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது.
- பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கோவை:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்களில் படிப்பவர்கள் 3 மொழி படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?.
பணம் இருப்பவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பணம் இல்லாத ஏழை, எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள். 3 மொழி வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. அனைவரும் மும்மொழி கொள்கையை வரவேற்கின்றனர்.
பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே.
கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருப்பது நரேந்திர மோடி தான்.
நரேந்திர மோடி எடுத்திருக்கும் திட்டங்களால் பெண்களின் வளர்ச்சி ஒருபடி மேலே தான் சென்று இருக்கிறது. குறிப்பாக பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் மகளிருக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், நரேந்திர மோடி செய்து கொண்டு இருக்கிறார்.
ஆனால தமிழ்நாட்டில் தாய்மார்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கு இருக்கிறது. ரெயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.