என் மலர்
தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மேம்பாலம் நிலம் எடுப்பு: செங்கல்பட்டு ஆட்சியரின் அறிவிப்பு ரத்து

- கிளாம்பாக்கம் பேருந்து முனையம்- ரெயில் நிலையம் இடையே மேம்பாலம்.
- மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
சென்னை நகரில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை எளிதாக சென்றடைய வண்டலூர்- ஊரப்பாக்கம் ரெயில் நிலையம் இடையே புறநகர் ரெயில் நிலையம் அமைய இருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து பேருந்து முனையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது "நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில்தான் வெளியிட வேண்டும். மக்களின் ஆட்சேபனையை கேட்ட மாவட்ட ஆட்சியரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என அறிவிக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிமன்றம் ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.