search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தெய்வயானை தவத்தால் வந்த சிவலிங்கம்!
    X

    தெய்வயானை தவத்தால் வந்த சிவலிங்கம்!

    • திருச்செந்தூர் முருகன் கோவிலில் மொத்தம் 8 சிவலிங்கங்கள் உள்ளன.
    • மார்கழி மாதம் பஞ்சலிங்க வழிபாடு செய்வது கூடுதல் பலன்களைப் பெற்றுத் தரும்.

    திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு சன்னதியும் ரகசியம் நிறைந்தது. அற்புதமான பின்னணி வரலாறுகள் இந்த ஆலயத்தில் மிகுந்து காணப்படுகின்றன. பல்வேறு புராணங்களில் இந்த ஆலயத்தின் அற்புதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அந்த அற்புத ரகசியங்களைத் தெரிந்து கொண்டு திருச்செந்தூர் ஆலயத்தில் வழிபட்டால் ஆத்மார்த்தமான திருப்தி ஏற்படும். அது மட்டுமின்றி திருச்செந்தூர் ஆலயம் மீதான உண்மை பக்தி மேலும் அதிகரிக்கும்.

    யுகங்களை கடந்த இந்த ஆலயம் ரகசியங்களின் சுரங்கமாக திகழ்கிறது. அந்த ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படும். திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கங்களும் நமக்கு அத்தகைய ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் தரும் வகையில் உள்ளன.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் மொத்தம் 8 சிவலிங்கங்கள் உள்ளன. கருவறை மற்றும் மகாமண்டபம் பகுதியில் இந்த 8 சிவலிங்கங்களும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் அற்புத வரலாறு உள்ளது.

    திருச்செந்தூர் ஆலயத்தில் கருவறை மூலவருக்கு முன்புறம் உள்ள பகுதியை "மணியடி" என்று அழைப்பார்கள். அங்கு நின்று மூலவரை சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.

    மணியடி பகுதியில் இடது புறம் ஒரு சிறிய வாயில் உள்ளது. அது குகையை குடைந்து உருவாக்கப்பட்டது. அதன் வழியே உள்ளே சென்றால் மூலவரை இடது புறமாக சுற்றிச் செல்வது போல் இருக்கும்.

    தொடர்ந்து உள்ளே சென்றால் குகையை குடைந்து சிறிய அறை உருவாக்கப்பட்டு இருப்பதை காணலாம். இந்த வழியை பாம்பறை என்று சொல்கிறார்கள். அங்குள்ள குகை அறையில் ஒரே பீடத்தில் 5 சிவலிங்கங்கள் இருப்பதை காணலாம். இதை பஞ்சலிங்கம் என்று அழைக்கிறார்கள்.

    இந்த பஞ்ச லிங்கங்கள் முருகப் பெருமானால் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யப்பட்ட சிறப்புக்குரிய லிங்கங்களாகும். உலகில் வேறு எங்கும் முருகப் பெருமானால் பஞ்சலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகப் பெருமானால் பிரதிஷ்டை செய்து, வழிபடப்பட்ட லிங்கம் திருச்செந்தூர் தலத்தில் மட்டுமே இருக்கிறது. யுகங்களை கடந்து இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அந்த லிங்கங்களை வழிபடுவது நமக்குத் கிடைத்த மிகப்பெரிய பேறாகும். இந்த பஞ்சலிங்கங்களை முருகப் பெருமான் பிரதிஷ்டை செய்ததன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

    முருகப் பெருமான் திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார். இந்தப் போரின்போது சூரன் படையில் இருந்த பலர் வதம் செய்யப்பட்டனர். அந்த பாவம் தீர திருச்செந்தூர் கடற்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த முருகப்பெருமான் முடிவு செய்தார்.

    அதன்படி பஞ்ச பூதங்களை பிரதிபலிக்கும் பஞ்சலிங்கங்களை முருகப் பெருமான் பிரதிஷ்டை செய்தார். பிறகு கடலில் புனித நீராடி, கடற்கரையில் இருக்கும் நாழி கிணற்றில் குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டார். பின்னர் பஞ்சலிங்கம் முன்பு அமர்ந்து பூக்களை எடுத்து பூஜை செய்யத் தொடங்கினார்.

    அப்போது தேவர்கள் வந்து "சுவாமி" என்று அழைத்தனர். உடனே முருகப் பெருமான் கையில் பூக்களுடன் திரும்பிப் பார்த்து தேவர்களுக்குக் காட்சி கொடுத்தார். அந்த அமைப்பில்தான் இன்றும் திருச்செந்தூர் ஆலய கருவறையில் முருகப் பெருமான் கையில் பூக்களுடன் காட்சி அளிக்கிறார்.

    பாம்பறையில் உள்ள பஞ்ச லிங்கங்களுக்கு இன்றும் தினமும் முருகப் பெருமானே பூஜைகள் செய்வதாக ஐதீகம். இதன் காரணமாக பஞ்ச லிங்கங்களுக்கு மனிதர்களால் தினசரி பூஜை நடத்தப்படுவதில்லை. மகா கும்பாபிஷேகம் காலத்தில் மட்டுமே இந்த பஞ்சலிங்கங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும்.

    பாம்பறை பஞ்சலிங்கங்கள் ஒரு மேடையில் வரிசையாக உள்ளன. இந்த லிங்கங்களுக்கு ஆவுடையார் எனும் சக்தி பாகம் இல்லை. ருத்திர பாகமான மேல் பாகம் மட்டுமே இருக்கிறது.

    பஞ்ச லிங்கங்களுக்கு மேல் குகையைக் குடைந்து ஒரு துளை அமைத்துள்ளனர். அந்த சிறு துளை வழியாக தினமும் இரவு தேவர்கள் பாம்பறைக்குள் வந்து பஞ்ச லிங்கங்களை வழிபாடு செய்வதாக சொல்கிறார்கள்.

    முருகனால் நிறுவப்பட்ட பஞ்ச லிங்கங்கள் ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு குகைக்குள் பராமரிப்பு இல்லாமல் போய் விட்டதாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் திருவிளையாடல் ஒன்றை நடத்தி பஞ்ச லிங்கங்களை மீண்டும் மக்கள் வழிபட வழிவகை செய்தான் என்று செவி வழி செய்தி ஒன்று சொல்கிறது. அந்த செவி வழி தகவல் வருமாறு:-

    குலசேகரன் பட்டினத்தை வீர செந்திக்காத்தான் செட்டி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வளர்த்த காராம் பசு ஒன்று ஆவணி மாதம் தினமும் இரவு வெளியே சென்று விட்டு, காலையில் திரும்பி வருவது தெரிய வந்தது. அந்த பசு தினமும் எங்கு சென்று வருகிறது என்பதை அறிய மன்னன் ஆர்வம் கொண்டான்.

    மறுநாள் இரவு அந்த பசு எங்கு செல்கிறது என்பதை கண்டுபிடிக்குமாறு தனது பணியாட்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி பணியாட்கள் அந்த பசுவை கண்காணித்தனர். அப்போது அந்த பசு திருச்செந்தூர் கடலோரத்தில் சந்தனமலை அடிவாரத்தில் மறைந்து கிடந்த பஞ்ச லிங்கங்கள் மீது பால் சொரிவதை கண்டனர்.

    இதை அறிந்த குறுநில மன்னன் வீரசெந்திக்காத்தான் செட்டி மகிழ்ச்சி அடைந்து அந்த பகுதியை சீரமைத்து பஞ்சலிங்கங்களை மக்கள் வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தான் என்று அந்த செவி வழி தகவலில் கூறப்பட்டுள்ளது.

    குலசேகரன்பட்டினம் ஏட்டில் இந்த வரலாறு எழுதப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள ஒரு தூணில் காராம்பசு ஒன்று லிங்கத்துக்கு பால் சொரியும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய சிறப்புடைய இந்த பஞ்ச லிங்கத்தை திருச்செந்தூர் ஆலயம் செல்பவர்கள் தவறாமல் வழிபட வேண்டும். முருகப் பெருமான் தினமும் இந்த பஞ்ச லிங்கங்களை வழிபட்டு, தனது தோஷத்தை நீக்கி பலன்களைப் பெறுகிறார். நீங்களும் பஞ்சலிங்கத்தை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெற்று பலன்களைப் பெற முடியும்.

    குறிப்பாக பஞ்சலிங்க வழிபாடு நம் முன்வினை பாவங்கள் அனைத்தையும் விலகச் செய்யும். மார்கழி மாதம் இந்த பஞ்சலிங்கங்களை தினமும் தேவர்கள் அதிக அளவில் வந்து வழிபடுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே மார்கழி மாதம் பஞ்சலிங்க வழிபாடு செய்வது கூடுதல் பலன்களைப் பெற்றுத் தரும்.

    பஞ்சலிங்க வழிபாடு முடிந்ததும் மற்ற மூன்று லிங்கங்களையும் மனதார நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று லிங்கங்களில் ஒரு லிங்கம் கருவறையில் மூலவருக்கு இடது புறம் சற்று உள்குழிந்த இடத்தில் இருக்கிறது.

    இந்த லிங்கத்தை "சூரிய லிங்கம்" என்கிறார்கள். சூரியன் வழிபாடு செய்து பலன்கள் பெற்றதால் அந்த லிங்கத்துக்கு இந்த பெயர் வந்துள்ளது. மூலவர் அறையில் தீபாராதனை காட்டும்போது மட்டுமே அந்த ஒளியில் இந்த லிங்கத்தை காண இயலும்.

    அடுத்து மகா மண்டபத்தில் உள்ள செந்தில் நாயகர் அறையில் வலது புறம் உள்ள மாடக்குழியில் சோமநாதர் லிங்கம் அமைந்துள்ளது. சந்திரன் வழிபட்டதால் இதை சந்திர லிங்கம் என்று அழைக்கிறார்கள்.

    இதையடுத்து உள்ள சண்முகர் சன்னதியில் ஆறுமுக பெருமானுக்கு வலது புறம் மாடக்குழியில் ஆன்மலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் வீர் லிங்கமாக கருதப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு தினமும் சாயரட்சை நேரத்தில் பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த லிங்கத்தை தெய்வயானை தவம் இருந்து பெற்றதாக கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியம்மையை தேடி திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு தெய்வ யானை சிவனை நோக்கி தவம் இருந்தாள்.

    வள்ளி உடன் இணைந்து உலக நன்ைமக்காக திருச்செந்தூர் தலத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்பது அவளது தவத்தின் நோக்கமாக இருந்தது. அவளுக்கு காட்சிக் கொடுத்த சிவபெருமான் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக வாக்கு அளித்தார்.

    பின்னர் நடனக் கோலத்துடன் சிவலிங்கத்தில் சிவபெருமான் தன்னை மறைத்துக் கொண்டார். அந்த லிங்கம் தான் ஆத்ம லிங்கமாக கருதப்படுகிறது. வள்ளி உடன் திருச்செந்தூருக்கு திரும்பி வந்த முருகப்பெருமான் தெய்வயானையுடன் இணைந்து அந்த லிங்கத்துக்கு மீண்டும் வழிபாடுகள் நடத்தினார்.

    சண்முகர் சன்னதியில் இருக்கும் இந்த ஆத்மலிங்கத்தை திருச்செந்தூர் தலத்துக்கு செல்லும் ஒவ்வொருவரும் நினைத்து வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    இந்த லிங்க வழிபாட்டை செய்த வள்ளி இச்சா சக்தியாகவும், தெய்வயானை கிரியா சக்தியாகவும் உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் திருச்செந்தூர் ஆலயத்தின் பிரகாரத்தில் வள்ளியும், தெய்வ யானையும் தனித்தனி சன்னதியில் இருப்பதை காணலாம். இந்த சூட்சும ரகசியத்தை புரிந்து கொண்டு வழிபாடு செய்தால் அதிக நன்மை கிடைக்கும்.

    அடுத்த வாரம் திருச்செந்தூர் தலத்தின் இன்னொரு அற்புதத்தை காணலாம்.

    Next Story
    ×