என் மலர்
தமிழ்நாடு

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தமிழர்களை கொன்றது ராஜதந்திரமா?- காங். தலைவருக்கு மதுரை ஆதீனம் கேள்வி

- நமது பாரத நாடு மதச்சார்பற்ற நாடு, எல்லோரும் அவரவர் வழிபாட்டில் சரியாக இருக்க வேண்டும்.
- கச்சத்தீவை திரும்ப பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மதுரை:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
"நமது பாரத நாடு மதச்சார்பற்ற நாடு, எல்லோரும் அவரவர் வழிபாட்டில் சரியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் வழிபாட்டில் தகராறு செய்யக்கூடாது. கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது ராஜதந்திரம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். அது அவருக்கு ராஜதந்திரமாக இருக்கலாம். தமிழர்களை கொன்றது தான் ராஜ தந்திரமா? லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள்.
அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தானே தமிழர்களை இந்திய ராணுவத்தை அனுப்பி கொன்றது. இது ராஜ தந்திரமா? வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் நம் சகோதரர்கள் தான். மத விவகாரத்தில் எல்லோரும் எல்லாவற்றையும் அனுசரித்து தான் செல்ல வேண்டும்.
கச்சத்தீவு கொடுத்ததை எப்படி வாங்க முடியும்? கொஞ்சம் கொஞ்சமாக தான் அதை செய்ய முடியும். ஒரு நாட்டிற்கு தாரை வார்த்து கொடுத்ததை சுலபமாக வாங்க முடியுமா? 60 வருடங்களுக்கு முன்பே கொடுத்து விட்டார்கள். 10 வருடமாக தான் மோடி பிரதமராக உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக தான் செய்ய முடியும். கச்சத்தீவை திரும்ப பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது"
இவ்வாறு அவர் கூறினார்.