என் மலர்
தமிழ்நாடு
மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது
- அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
- அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே அணை 2 முறை நிரம்பியது. இந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து கணிசமாக வந்து கொண்டு இருப்பதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119 அடியை எட்டியது. எனவே இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
மேலும் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.