என் மலர்
தமிழ்நாடு
4 மாவட்டங்களில் ரூ.9000 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்- அமைச்சர் கே.என்.நேரு
- உங்களுடைய தொகுதியில் மட்டுமல்ல என்னுடைய தொகுதிகளிலும் மகளிர் உரிமைத்தொகையை கேட்கிறார்கள்.
- போக்குவரத்து மிகுந்த பகுதியில் பாலம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்ததாரர்களிடம் பேசி உள்ளோம்.
சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் குடிநீர் திட்டம் தொடர்பாக ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்ட திட்டத்திற்கான அறிக்கை தயார். ஜூன் மாதம் நிதி கிடைத்த உடன் கூட்டுக்குடிநீர் 2-ம் கட்ட திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும். ஒகேனக்கல் 2-ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஓசூர் மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் என்று கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை கோருவோர் தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி கூறியதாவது:
உங்களுடைய தொகுதியில் மட்டுமல்ல என்னுடைய தொகுதிகளிலும் மகளிர் உரிமைத்தொகையை கேட்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் 2.54 லட்சம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுகின்றனர். திட்டத்தில் எவ்வளவு பேருக்கு வழங்க முடியுமோ அவ்வளவு பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பித்த 3 மாதத்திற்குள் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி உள்ள அனைவருக்குமே மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று திட்டவட்டமாக கூறினார்.
கீழ்பென்னாத்தூர் சட்டசபை உறுப்பினரும் துணை சபாநாயகருமான பிச்சாண்டி கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூரில் ரூ.9000 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
ஜல்ஜீவன் திட்ட நிதி பெறுவதில் தாமதமாகிறது. நிதி கிடைத்ததும் 4 மாவட்டங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
படப்பை பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:
போக்குவரத்து மிகுந்த பகுதியில் பாலம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்ததாரர்களிடம் பேசி உள்ளோம். போக்குவரத்து மிகுந்த பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று கூறினார்.
வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா? என்ற எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவனின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசியதாவது:
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடல் நீர் புகுந்து நிலத்தடி நீர் உப்பாக மாறி உள்ளது. எந்தப்பகுதியில் தடுப்பணை வேண்டுமென உறுப்பினர்கள் கூறினால் அந்த பகுதியில் தடுப்பணை கட்டித்தரப்படும் என்று பேசினார்.