என் மலர்
தமிழ்நாடு
தேனி மாவட்டத்தில் 2-ம் நாளாக கனமழை: முல்லைப்பெரியாறு நீர்மட்டம் 8 அடி உயர்வு- வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரிப்பு
- அணையின் நீர்மட்டம் 126.65 அடியாக உயர்ந்துள்ளது.
- அணையின் மொத்த நீர் இருப்பு 4,190 மில்லியன் கனஅடியாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வெள்ளப்பெருக்கு தொடர் மழை காரணமாக இன்றும் தேனி மாவட்டத்தில் 2-ம் நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருளி அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதுடன் மக்கள் நடந்து செல்லும் பாதையிலும் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேகமலை, சின்னசுருளி அருவியிலும், கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டதால் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் சென்றது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 127.65 அடியாக உள்ளது. 2 நாட்களில் சுமார் 8 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு 17652 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4190 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடிக்கும் கீழ் இருந்த நிலையில் இன்று காலை 5 அடிக்கு மேல் உயர்ந்து 55.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10347 கன அடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2759 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 672 கன அடி. திறப்பு 566 கன அடி. இருப்பு 435.32 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.11 அடியாக உள்ளது. ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 666 கன அடியாகவும், திறப்பு 30 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 96.55 மி.கன அடியாக உள்ளது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடி. வரத்து மற்றும் திறப்பு 122.57 கன அடி. இருப்பு 79.57 மி.கன அடி.
பெரியாறு 54, தேக்கடி 100, சண்முகாநதி அணை 84, ஆண்டிபட்டி 35, அரண்மனைபுதூர் 28.2, வீரபாண்டி 12.4, பெரிய குளம் 55.2, மஞ்சளாறு 42, சோத்துப்பாறை 33, வைகை அைண 34, போடி 18.8, உத்தமபாளையம் 47.8, கூடலூர் 37.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.