என் மலர்
தமிழ்நாடு

"கலைஞர் எழுதுகோள் விருது" பெற்ற நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ்க்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

- மிகச் சிறந்த பத்திரிகையாளரான நக்கீரன் கோபாலுக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
- நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், தொலைக்காட்சி நெறியாளர் சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும். விருது பெற்ற அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
பத்திரிகை துறையில் புலனாய்வு செய்து செய்திகளை சேகரித்து துணிச்சலுடன் வெளியிடுவதில் சாதனைகளை புரிந்தவர் நக்கீரன் கோபால்.
பெயருக்கு ஏற்றாற்போல் யார் குற்றம் செய்தாலும் அதை கண்டிக்கின்ற வகையில் செய்திகளை வெளியிடுவதில் தனித்தன்மையுடன் செயல்படுபவர்.
கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் அவர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற போது, அவரை மீட்பதற்காக அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், நக்கீரன் கோபால் அவர்களை காட்டிற்குள் அனுப்பித் தான் மீட்டார் என்பதை எவரும் மறக்க இயலாது.
அன்றைக்கு மிகுந்த துணிச்சலோடு காட்டிற்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, நடிகர் ராஜ்குமாரை மீட்டததனால் தமிழக - கர்நாடக மக்களிடையே நிலவிய பதற்றத்தை தவிர்த்து நல்லிணக்கம் ஏற்பட தனது உயிரை பணயம் வைத்து செயல்பட்டவர் நக்கீரன் கோபால்.
மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தொலைக்காட்சி ஊடக நெறியாளராக செயல்பட்டு, விவாதங்களில் கருத்து மோதல்களை அனைவரையும் கவருகிற வகையில் நடத்துவதன் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்றவர்.
நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும். அந்த வகையில் சுகிதா சாரங்கராஜ் அவர்கள் நமது பாராட்டுக்குரியவராவார்.
நக்கீரன் கோபால் அவர்களுக்கும், சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் கலைஞர் எழுதுகோல் விருது மூலம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.