என் மலர்
தமிழ்நாடு

புதிய வருமான வரிச் சட்டம் 2025 - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு

- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
- தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு.
புதிய வருமான வரிச் சட்டம் 2025-க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
வங்கி, முதலீட்டு கணக்குகள், கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு எதுவும் தேவைப்படாமல் உடைத்து உள்ளே சென்று சோதனையிடும் அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் சமூக வலைதள கணக்குகள், இமெயில்களில் அவர்களின் பல அந்தரங்கமான விஷயங்கள், வருமான வரி அதிகாரிகளுக்கு தேவையில்லாத பல தகவல்கள் இருக்கும்.
மேலும், சிலர் தொழில் ரகசியம், தொழில் யுக்திகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்கள், இமெயில்கள் வைத்திருப்பார்கள். அவை அனைத்திலும், வருமானவரி அதிகாரிகள், அவர்களது அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து தகவல்களை சேகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 19(1) (ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கு ஆளும் ஒன்றிய அரசு இதுபோன்று அதிகாரத்தை அளித்துள்ளதோ என சந்தேகமாகவுள்ளது.
தேவைக்கு அதிகமான அதிகாரமாகவே கருதப்படுவதால் இந்த மாற்றங்களை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டு, புதிய வருமான வரிச் சட்டம் 2025 சட்டத்தை அமல்படுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.