என் மலர்
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு

- சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 இடங்களிலும், திருவாரூர், மன்னார்குடியில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
- என்.ஐ.ஏ. சோதனையையொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை பகுதியில் தனியாக அலுவலகம் அமைத்து தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தக்ரீர் என்கிற இயக்கத்துக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வந்தது கடந்த ஆண்டு மே மாதம் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹமீது உசேன், அவ ரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகிய 3 பேரை முதலில் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்கனவே என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது முகமது, அகமது அலி, காதர் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மேலும் சிலரை கண்காணித்து வந்தனர். இதுதொடர்பாக தமிழகத்தில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் 3 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 இடங்களிலும், திருவாரூர், மன்னார்குடியில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னையையொட்டிய புறநகர் பகுதிகளான முடிச்சூர், குன்றத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் சோதனையில் 2 பேர் சிக்கியுள்ளனர். மன்னார்குடியில் நடைபெற்று வரும் சோதனையின்போது பாபா பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதாகி உள்ள நிலையில் மேலும் 3 பேர் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொறுத்தவரையில் தடை செய்யப் பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பது, பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன்படி கடந்த சில நாட்களாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அந்த வரிசையில்தான் தற்போது ராயப்பேட்டையில் செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்கள் பற்றிய விசாரணையில் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 38) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் சென்ற அதி காரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பக்ருதீனின் வீட்டில் முக்கிய ஆவணங்கள், தடயங்கள் எதுவும் இருக்கின்றதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், அவரது செல்போன்களையும் கைப்பற்றி, அதில் ஏதேனும் தகவல்கள் இருக்கின்றதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டில் ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெற்றது.
என்.ஐ.ஏ. சோதனையையொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 10.30 மணிக்கு முடிவடைந்தது. சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களையும், தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக பாபா பக்ருதீனையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
இந்த சோதனை தொடர்பாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 10 இடங்களிலும், செப்டம்பர் மாதம் 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தோம். இதைத் தொடர்ந்தே இன்று 6 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.
இதன்மூலம் இந்த வழக்கில் மட்டும் கடந்த 8 மாதத்தில் 28 இடங்களில் சோதனையை நடத்தி முடித்துள்ளோம். இன்று கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சோதனையை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதன்மூலம் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத்தக்ரீர் இயக்கத்துடன் தொடர்புடைய மேலும் பலர் விரைவில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.