என் மலர்
தமிழ்நாடு
காரின் சீட்டுக்கு அடியில் 50 கிலோ கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் கைது
- வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கேரள மாநிலத்திற்கு சொகுசு காரில் நாமக்கல் மாவட்ட எல்லையை கடந்து ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகர் பைபாஸ் வாகன சோதனை சாவடி வழியாக கடத்தி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்து சித்தோடு அடுத்த லட்சுமி நகர் வாகன சோதனைச் சாவடியில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்து வந்தனர். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் அந்த வழியாக வந்தது. அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டதும் காரில் வந்தவர் காரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டு சர்வீஸ் சாலையில் திருப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதை தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்க சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாருங்கமகி (வயது 28) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் நெல்லுருவில் இருந்து 50 கிலோ எடை உள்ள கஞ்சாவை வாங்கி காரின் பின்பக்க சீட்டில் ரகசிய அறை அமைத்து அந்த கஞ்சாவை கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சாருங்கமகியை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.