search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சரக்கு ரெயில் பெட்டி தடம் புரண்டது எப்படி?- அதிகாரிகள் விளக்கம்
    X

    சரக்கு ரெயில் பெட்டி தடம் புரண்டது எப்படி?- அதிகாரிகள் விளக்கம்

    • ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன.
    • பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    ஓசூர் வழியாக சேலத்திற்கு செல்ல இருந்த சரக்கு ரெயிலின் டேங்கர் பெட்டி தடம்புரண்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் இருந்து சேலத்திற்கு நேற்று மாலை 52 காலி டேங்கர்களுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையம் அருகில் தளி ஜங்ஷன் பக்கமாக நேற்று மாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

    அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.

    சுமார் 300 மீட்டர் தூரம் சென்று ரெயில் நின்ற பிறகு டிரைவர் வந்து பார்த்தார். அப்போது 18-வது டேங்கரின் முன்புறமாக இருந்த சக்கரங்கள் தடம்புரண்டு இருந்தது. இதை பார்த்த என்ஜின் டிரைவர் ஓசூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் பெங்களூருவில் உள்ள தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து உடனடியாக பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    இதைத் தொடர்ந்து 18-வது டேங்கருக்கு பின்னால் இருந்த 34 டேங்கர்களும் மாற்று என்ஜின் மூலமாக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரெயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 18-வது டேங்கரில் இருந்த சக்கரங்கள் சரி செய்யப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதனால் அந்த பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பெங்களூரு பனஸ்வாடியில் இருந்து சேலத்திற்கு இந்த சரக்கு ரெயில் சென்றுள்ளது. இந்த ரெயில் சேலம் ஐ.ஓ.சி.யில் இரந்து பெட்ரோல் நிரப்பி வருவதற்காக 52 காலி டேங்கர்களுடன் சென்றுள்ளது.

    அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும் போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற பழுதான நிலையில் இருந்த 4 சக்கரங்கள் திடீரென்று தடம் புரண்டன.

    தற்போது மீட்பு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் சீராக செல்கின்றன என்றார்.

    இதனால் ஓசூர்-பெங்களூரு ரெயில்வே பாதையில் சென்ற பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ரெயில் வலது புறமாக தடம்புரண்டது. இடது புறமாக தடம் புரண்டு இருந்தால், பெரும் விபத்தை இது ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், இருப்புப் பாதை அருகே, இடது புறத்தில், ஏராளமான வணிக நிறுவனங்களும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்ட டிரைவர், தடம் புரண்டு சுமார் 150 மீட்டர் அளவில், ரெயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தியுள்ளார். அவர், சரியான நேரத்தில், சரியான முடிவை, விரைவாக எடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×