search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல்- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
    X

    22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல்- மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

    • விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதில் தளர்வு.
    • 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராக செயல்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நாள் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

    வடகிழக்குப் பருவமழை காரணமாக செப்டம்பர் மாதம் முதல் நாளிலிருந்து கொள்முதல் செய்தால் டெல்டா விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி 2022-2023 காரிப் சந்தைப் பருவத்திலிருந்து செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    01.09.2024 முதல் 17.01.2025 வரை 1349 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 80,634 விவசாயிகளிடமிருந்து 5,72,464 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1378 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், நாளது தேதி வரை மத்திய அரசு அனுமதித்துள்ள 17 சதவீத ஈரப்பதத்தில் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாகத் தொடங்கியதாலும் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்ட்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளதாலும் வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் விவசாயிகள் நெல்லினை உலரவைக்கச் சிரமப்படுவதால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17 சதவீத ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×