search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாலமேடு ஜல்லிக்கட்டு- முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அமரும் கேலரி இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு- முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • பாலமேடு பேரூராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான மைதான வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 15-ந் தேதி (புதன்கிழமை) அங்குள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் அரசு வழிகாட்டுதல்படி சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தற்போது வாடிவாசல் வண்ணம் பூசும் பணிகள், பார்வையாளர் அமரும் கேலரி அமைப்பது, இரண்டடுக்கு பாதுகாப்பு வேலி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலமேடு பேரூராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான மைதான வரைபடம் தற்போது வெளியாகி உள்ளது.

    அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா முழுவதும் கண்காணிக்கப்பட உள்ளது.

    இந்த வரைபடத்தில் 13 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 6 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகள், ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் ஆங்காங்கே நின்று கண்டு ரசிக்க பேருந்து நிலையம், விளக்குதூண் உள்ளிட்ட 4 இடங்களில் அகன்ற திரை (எல்.இ.டி.) மூலம் நேரடி ஒளிபரப்பு வசதி, 10 இடங்களில் தற்காலிக குடிநீர் வசதிகள், தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகங்கள், உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.

    மேலும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 820 காளைகளும், ஆயிரத்து 914 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் சுமார் 900 காளைகளுக்கு மேல் வாடிவாசலில் அவிழ்த்து விட பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி தகுதி பெறும் காளைகள் அதிகளவில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பாலமேடு பேரூராட்சி நிர்வாகமும், மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகளும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×