என் மலர்
தமிழ்நாடு
பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு அண்ணாமலை எப்போது தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளப்போகிறார்?- தி.மு.க.வினர் போஸ்டர்
- மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தி.மு.க. சார்பில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
- அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து, மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க கோரி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தி.மு.க. சார்பில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக்கொள்ளப் போகிறார்? என்ற கேள்வியுடன் அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான மதுரை ரோடு, தேனி ரோடு, பேருந்து நிலையம், வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு என பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் ஒட்டி இருக்கிறார்கள்.