என் மலர்
தமிழ்நாடு

மகா சிவராத்திரி விழா-பா.ஜ.க. அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பு: அமித் ஷா வருகையையொட்டி போலீசார் ஆய்வு

- பா.ஜ.க. திறப்பு விழா நடைபெறும் இடம் மற்றும் அமித் ஷா வந்து செல்லும் இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
- மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது.
கோவை:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வருகிற 25-ந்தேதி மாலை கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அன்று இரவு அவர் பீளமேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். பின்னர் மறுநாள் 26-ந்தேதி காலை பீளமேடு அருகே எல்லைத்தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அமித் ஷா திறந்து வைக்கிறார்.
மாலையில் ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மேலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பா.ஜ.க. திறப்பு விழா நடைபெறும் இடம் மற்றும் அமித் ஷா வந்து செல்லும் இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே பா.ஜ.க. அலுவலகம் திறப்புக்கு பின்னர் அங்கு திரளும் பா.ஜ.க.வினர் மத்தியில் அமித் ஷா உரையாற்ற உள்ளார். இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சேகர், மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், ஊட்டி பொறுப்பாளர் நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாத், விஜயகாண்டீபன், விஜயகாந்த், கனக சபாபதி, ஜி.கே. செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் பா.ஜ.க. புதிய அலுவலகம் 2 மாடி கட்டிடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கூட்ட அரங்கமும், சிறிய அளவில் மற்றொரு கூட்ட அரங்கமும், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறை தனியாகவும் உள்ளன.