என் மலர்
தமிழ்நாடு
அறைக்குள் மட்டும்தான் அரசியல்.. களத்திற்கு வராமல் களமாட முடியுமா விஜய்?
- எல்லாவற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டார் விஜய்.
- கட்சி அலுவலகத்தில் இருந்தே வெளியிட்டார் விஜய்.
திராவிட கட்சிகள் ஆதிக்கம் கொண்ட தமிழ் நாடு அரசியலில் திராவிடம் மற்றும் தமிழ்த் தேசியம் கலந்த அரசியலை கொடுப்பதாக கூறி களத்திற்கு வந்திருப்பவர் நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜய். திரையுலகில் முன்னணி நடிகர், புகழின் உச்சத்தில் இருக்கும் போதே மக்கள் பணியாற்ற அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டவர் விஜய் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
கட்சி தொடங்கியது முதல், மாநாடு நடத்தியது, நிவாரணம் வழங்கியது மற்றும் அதன்பின் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் வித்தியாசமான அனுகுமுறையை கையாண்டார் விஜய். கட்சி அறிவிப்பு வெளியான பின்பு, கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடல் மிக முக்கிய நிர்வாகிகள் அடங்கிய சிறிய கூட்டத்தின் மத்தியில் தான் வெளியிடப்பட்டது.
#Periyar146 #பெரியார்146 pic.twitter.com/JSlpeaHuQz
— TVK Vijay (@tvkvijayhq) September 17, 2024
அதன்பிறகு, தந்தை பெரியார் பிறந்த நாளில், சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு ரகசியமாக சென்ற த.வெ.க. தலைவர் விஜய், தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதிகாலையிலேயே பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய போதிலும், மதிய வேளையில் அதுபற்றிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை கட்சி அலுவலகத்தில் இருந்தே வெளியிட்டார் த.வெ.க. தலைவர் விஜய்.
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/pLo9FFF4S4
— TVK Vijay (@tvkvijayhq) October 30, 2024
இதன் தொடர்ச்சியாக த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்த ஒன்றிரண்டு நாட்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கும் த.வெ.க. தலைவர் விஜய் தனது அலுவலகத்தில் இருந்தபடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டார்.
இதன்பிறகு விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பல அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி, மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
எனினும், த.வெ.க. தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை தனது கட்சி அலுவலகத்திற்கு வாகனத்தில் அழைத்து வந்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்காமல், அழைத்து வந்து சந்தித்தது பேசு பொருளானது.
விஜயின் அரசியல் அறிவிப்பு தொடங்கியதில் இருந்து அவருக்கு ஆதரவாக பேசி வந்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு விஜயை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்த விவகாரத்தில் விஜய்க்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தார். இது குறித்து பேசும் போது, விஜய் பொது வெளியில் வரும் போது அவரை பார்க்க அதிகளவு கூட்டம் கூடும். இதனால் மக்கள் இன்னலுக்கு ஆளாவர். அப்போதும் விஜயை தான் விமர்சிப்பார்கள் என்று சீமான் கூறினார்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை… pic.twitter.com/5bDhtzaH1y
— TVK Vijay (@tvkvijayhq) December 24, 2024
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு மக்களை நேரில் சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று தந்தை பெரியார் நினைவு நாளில் கூட பெரியார் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவதை தவிர்த்துள்ளார். மாறாக தனது கட்சி அலுவலகத்தில் தந்தை பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விஜய் வெளியிட்டுள்ளார்.
தந்தை பெரியார் நினைவு நாளில், தி.மு.க.வினர் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையிட்டார்கள். அ.தி.மு.க.வினர் அண்ணா மேம்பாலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையிட்டனர். தனது கட்சியின் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட விஜய் பனையூரில் அலுவலகத்திலேயே பெரியார் படத்திற்கு மாலையிட்டார். கட்சி அலுவலகத்திலேயே அரசியல் செய்யும் விஜயை நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவர் work from home 'மோட்'-இல் இருக்கிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
நிவாரண உதவி வழங்குவதில் துவங்கி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்குக் கூட களத்திற்கு வராத விஜய் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெளிவற்ற நிலையில் தான் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், களத்திற்கு வராமலேயே அரசியல் செய்யும் விஜயின் போக்கு தேர்தல் களத்தில் அவர் எதிர்பார்க்கும் வெற்றியை அவருக்கு பெற்றுக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அதேநேரம், அரசியல் அறிவிப்புக்கு முன்னதாக தமிழக அரசியலை உலுக்கிய மெரினா போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் உள்ளிட்ட நிகழ்வுகளில் சத்தமில்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்றார் விஜய். அரசியல் அறிவிப்புக்கு பின்பும் கூட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் சமீப கால அரசியல் அலுவல்களை அலுவலகத்திற்குள் முடித்துக் கொள்ள வேறென்ன காரணமாக இருக்கும் என்பதை அவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.