search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல தவறுகளை மறைக்க மத்திய அரசை குறைகூறி தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது-  பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    பல தவறுகளை மறைக்க மத்திய அரசை குறைகூறி தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது- பொன்.ராதாகிருஷ்ணன்

    • உலகத்தில் எந்த நாட்டிலும் டெபாசிட் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாது.
    • தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய மோடியை வர வேண்டாம் என சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்றார்.

    மாவட்ட துணைத்தலைவர் விக்னேஷ், காரமடை மண்டல தலைவர் ஆர்.கே ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் வி.பி.ஜெகநாதன், சங்கீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கும், மத்திய பட்ஜெட்டிற்கும் நெருங்கிய உறவு உள்ளது. இந்திய அளவில் முதல் பட்ஜெட்டை தயாரித்தது தமிழகத்தை சேர்ந்தவர். மோடியின் அரசு ஏழைகளுக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு. ஏழை எளிய மக்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அரசாக உள்ளது.

    மக்களிடம் பணம் இல்லை என்றால் இதற்கு முன்னாள் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி தான் காரணம். உலகத்தில் எந்த நாட்டிலும் டெபாசிட் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாது. ஆனால் மோடியின் ஆட்சியில் பணம் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் வங்கியில் பணம் தொடங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் 1 வாரத்தில் 1.8 லட்சம் கோடி வங்கி கணக்கு தொடங்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.2.50 ஆயிரம் கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் பல இடங்களில் சாலை அமைக்க தமிழக அரசு இடம் எடுத்து மத்திய அரசுக்கு வழங்காததால் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. தமிழக அரசு செய்யும் பல தவறுகளை மறைக்க மத்திய அரசை காரணம் காண்பித்து தப்பித்து செல்கின்றனர்.

    தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய மோடியை வர வேண்டாம் என சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை. இன்று தி.மு.க.வில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை சி.பி.எஸ்.இ பள்ளிகளை தொடங்கி அங்கு இந்தி மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர். திமுக ஆட்சியில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் வருகையால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல அரசு பள்ளிகளில் மொத்தமாக 4 மாணவர்கள் வரை தான் கல்வி பயின்று வருகின்றனர்.

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க 2026-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும். எனது வாழ்நாளில் ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகர தலைவர் உமாசங்கர் நன்றி கூறினார்.

    Next Story
    ×