என் மலர்
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகை எதிரொலி: ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு உயர்வு
- ரெயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான்.
- தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சம் தொட்டு உள்ளது.
சென்னை:
பண்டிகைக் காலங்கள் என்றாலே ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவரை சாதாரண கட்டணங்களில் இயங்கி வரும் ஆம்னி பஸ்கள், பண்டிகை காலம் நெருங்கியதும் கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்துவிடும்.
வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக சென்னையில் வசித்து வரும் வெளியூர் மக்கள் பஸ், ரெயல்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம்.
ரெயில்களில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பஸ்கள்தான்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகள் முதல் விருப்பம் ஆம்னி பஸ்கள் தான். காரணம், கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை பிடிப்பதை விட கோயம்பேட்டில் இருந்தே தனியார் பஸ்களில் பயணிக்க முடியும் என்பதால் ஆம்னி பஸ்களை தேர்வு செய்கிறார்கள்.
இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சம் தொட்டு உள்ளது. அதாவது, வழக்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.800, ரூ.850-க்கு ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் பயணக் கட்டணம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், மேற்குறிப்பிட்ட தேதிகளில் தென்மாவட்ட நகரங்களான நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு செல்வதற்கு தனியார் ஆம்னி பஸ்களில் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இதே போன்று, மேற்கு மாவட்டமான கோவைக்கு அதிகபட்சமாக ரூ.2,850 வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களின் அதிகபட்சமான கட்டண கொள்ளை ஆன்-லைனில் வெளிப்படையாக இருந்த போதிலும் இது குறித்து தமிழக அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.