search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பரிசு தொகுப்பு- டோக்கன் வினியோகம் தொடங்கியது
    X

    பொங்கல் பரிசு தொகுப்பு- டோக்கன் வினியோகம் தொடங்கியது

    • ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டி உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

    அந்தந்த ஏரியாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வரும் டோக்கனில் எப்போது பொருட்கள் வாங்க வர வேண்டும் என்பதை நாள் நேரம் குறிப்பிட்டு எழுதி கொடுக்கின்றனர்.

    டோக்கன் வழங்கும் பணியை 4 நாட்களுக்குள் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இதற்கிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார். இதில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ரேஷனில் பொதுக்களுக்கு கரும்பு வழங்கும்போது கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழுக் கரும்போடு, அப்படியே வழங்க வேண்டும் என்றும் தரமான பச்சரிசி, சர்க்கரை வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் வழங்குவதற்கு பதிலாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்ப அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

    இதன் மூலம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அலைச்சல் மிச்சமாவது மட்டுமின்றி கடைகளில் பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு வெளியே செல்வது தவிர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×