என் மலர்
தமிழ்நாடு

இந்திய அணிக்கு குவியும் பாராட்டுகள்

- வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தகுதியான வெற்றியைப் பெற்றனர்.
- இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்.
சென்னை:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் மோதின. இதில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்து. இதன்மூலம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா அணி 3-வது முறையாக வென்றுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!
இது ஒரு அற்புதமான போட்டி, எங்கள் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தகுதியான வெற்றியைப் பெற்றனர். சபாஷ், இந்திய அணி என்று கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
துபாயில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. இந்தத் தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் சாதனை அதிர்ஷ்டத்தால் விளைந்ததல்ல... திறமையால் கிடைத்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வியக்கத்தக்க சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்; இனிவரும் பன்னாட்டுத் தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்று சாதனைகளைத் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.