என் மலர்
தமிழ்நாடு

மத்திய அமைச்சராக முயற்சித்த ஓ.பி.எஸ். - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

- நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன்.
- இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.
மதுரை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
அம்மா நம்மோடு இருந்த போது இதே தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா இந்த சாமானிய தொண்டரான உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்.
அதே 2010-ம் ஆண்டு இன்றைய எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிற போது ஓ.பன்னீர் செல்வத்தை தள்ளி வைத்துவிட்டு அம்மா என்னை அந்த செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு இந்த சாமானிய தொண்டன் உதயகுமாருக்கு ஆணையிட்டார் என்பதும் அந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தபோது தலைமைக்கும், இரட்டை இலைக்கும் விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு நழுவி போகிற போது தேனி தொகுதியில் இரட்டை இலை மலர்ந்தது.
அதற்கு இந்த சாமானிய தொண்டனின் விசுவாசமான உழைப்பு எப்படி என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம். நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அ.தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள்.
அம்மா தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைபாட்டில் தான் சாமானிய தொண்டனான என்னிடம் பகிர்ந்து கொண்டார் என்பதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது.
அம்மாவின் மறு வடிவமாக இருக்கிற எடப்பாடியார் ஆணையிட்டால், இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அம்மா பேரவை பொறுப்பு, மாவட்ட செயலாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்பணியில் கூட அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக, கட்சியின் வெற்றிக்காக, என்னை தியாகம் செய்ய ஒரு நாளும் தயங்கவில்லை. இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்குபவன் அல்ல?
நான் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஒருபோதும் ஆசைப்பட்டவன் அல்ல. நான் வகிக்கின்ற இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு நான் பணியாற்றியதற்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர, நான் தேடிப்போய் பெற்ற பதவிகள் அல்ல.
அன்றைக்கு அம்மா இருந்த சமயத்தில், டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள். தயவு செய்து அதை சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.
ஆகவே தயவு செய்து நீங்கள் ஏதோ ஒரு மூடு மந்திரம் போல என்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை என் கழகப்பணி மீதும், நான் கொண்டுள்ள விசுவாசத்தின் மீதும் நீங்கள் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,
நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன். எங்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று பிரச்சனையை திசை திருப்பும் பாணியில் நீங்கள் பேசி வருவது ஆண்டவனுக்கே பொருந்தாது. இந்த கோடான கோடி அப்பாவி தொண்டர்களையும், தமிழக மக்களையும் இனியும் நீங்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிலை சொல்கிறேன்.
உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் நீங்கள் போவீர்கள் என்பது தான் சமீபகால நடவடிக்கை. உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பிரச்சனை. இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான்.
ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அதை நன்றாக அறிவோம். அப்பாவி சாமானிய ஏழை, எளிய தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும். இதை நான் சத்தியமாக தெய்வ சாட்சியாக சொல்கிறேன், அத்தனையும் உண்மை.
வெளியில் இருந்து யாரும் எந்த சோதனையும் ஏற்படுத்தவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கும் நீங்கள்தான் காரணம். பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் நிற்பதற்கு யார் காரணம்? நீங்கள் பதவி ஆசையினாலே மத்திய அமைச்சராகி விடவேண்டும் என்ற ஆசைதானே காரணம்.
தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் நினைத்தீர்களே தவிர, வேறு யாரையாவது உருவாக்கி உள்ளீர்களா? இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.
உங்களுடைய சுயநலத்திற்காக, அதிகாரத்திற்காக நீங்கள் உண்மையை மறைத்து செயல்பட்டீர்கள். அது தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி, நயினார் நாகேந்திரன் வரை உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் கடைபிடித்த பாதை, தர்மம்.
ஆகவே எனக்கு எச்சரிக்கை விடுகிற தகுதி உங்களுக்கு இல்லை. நான் எந்த எச்சரிக்கையையும் எதிர்கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.